அமல பாரதத் திட்டம்

இயற்கை இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் சுற்றுச்சூழல் மாசடைவதே ஆகும். மனிதன் உபயோகித்து வெளியேற்றும் கழிவுகளால் வாயு, நீர், மண், உணவு என அனைத்தும் விஷமயமாகி விட்டன. எத்தனையோ உயிரினங்களின் பரம்பரை  அழிந்து விட்டன.பெற்ற தாயைப்போல் நமக்கு அடைக்கலமும், ஆதரவுமளிக்கும் பூமித்தாய்க்கு நாம் மரணகீதம் பாடுகிறோம். நாம் விழிப்படைந்து செயல்பட்டே ஆகவேண்டும். இதற்குமேலும் தாமதிப்பது கூடாது. நம் ஒவ்வொருவரின் அன்பும், கருணையும் கூடிய செயல்பாடு இன்று பூமித்தாய்க்கு அவசியமாகும். பூமியில் உயிரினங்கள் வாழ வேண்டுமெனில், மனித குலம் அழிய வேண்டும் என்ற நிலை வரக்கூடாது.

மனிதனுக்கு அருளைவாரி வழங்குகின்ற கண்கண்ட தெய்வமாகத் திகழ்வது இப்பூமி. இந்தப் பூமியையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. உண்ணவும், உறங்கவும் மறக்காதது போல், இதையும் நாம் மறக்கக் கூடாது. பூமியை மாசடைவதிலிருந்து காப்பது, நாம் இவ்வுலகில் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத தேவையாகும். இதற்கான முயற்சி நம் வாழ்வில், அன்றாடப்  பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாறவேண்டும்.

குப்பைக்கூளங்களை கவனமின்றிக் கொட்டுதல், பாதையோரங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் மிகவும் அதிகரித்து வரும் நாடுகளில் பாரதமும் ஒன்றாகும். பாரதமாதாவின் தூயமுகம், மாசுகளால் அவலட்சணம் ஆகாமல் இருக்கவும், நமது நாட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவும், ஸ்ரீ மாதாஅமிர்தானந்தமயி தேவியின் சங்கல்பப்படி செயல்படுத்தப் படும் திட்டமே “அமலபாரதம்” ஆகும். பூமியை மாசுகளில் இருந்து விடுவிக்கும் இந்த மகாவேள்வியில் பங்கெடுக்க அனைவரையும் நாங்கள் இதயப்பூர்வமாக அன்புடன் அழைக்கிறோம். தங்களால் இயன்றவகையில் இதன் வெற்றிக்காக உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Leave a Reply