அமலபாரதம் அழகு பாரதம்
குழந்தைகளே,
அழகான இந்த பூமி மற்றும் இயற்கைக்கு நாம் மிகவும் கடன்பட்டிருக்கிறோம். இவற்றின் தூய்மையையும், எழிலையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பூமி நமக்கு உணவு, நீர், காற்று முதலியவற்றை அளிக்கிறது. நாம் உயிர் வாழ இடமளிக்கிறது. நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும், அநீதிகளையும் மன்னித்து நம்மைக் காப்பவள் பூமி. இவ்விதம் காணும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி பூமி நமது தாயாவாள். நம்மை ஈன்ற அன்னை, இரண்டு வயது வரை அவளது மடியில் அமர இடமளிக்கக் கூடும். ஆனால் பூமித்தாயோ வாழ்நாள் முழுவதும் நமது பாரத்தைத் தாங்கிக்கொண்டு நம்மைப் பாதுகாக்கிறாள். ஆகவே நமது உடலைப் பேணும் கவனத்துடனும் உற்சாகத்துடனும் இந்தப் பூமியையும், இயற்கையையும் பராமரிக்க வேண்டும். பூமியை மாசடையச் செய்வது என்பது தனது உடலில் ஓடும் ரத்தத்தில் விஷம் கலக்கச் செய்வதற்குச் சமமாகும். அந்த உணர்வு நமக்கு ஏற்பட வேண்டும்.
தூய்மையின்மையின் பெயரில் வெளிநாட்டவர் நம்முடைய நாட்டை அளவுக்கதிகமாகக் கேலி செய்கிறார்கள். வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம்முடைய சாலைகளைக் குறித்தும்,பொது இடங்களைக் குறித்தும் விமர்சிப்பதைக் காணும்போது அம்மாவின் மனம் வருந்துகிறது. நம்முடைய பாரதம் அணுசக்தி நாடாகும். நம்முடைய நாடு பொருளாதாரத்திலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. ஆனால் துப்புரவு இல்லாததாலும் சுற்றுப்புறத் தூய்மை இல்லாததாலும் இப்போதும் ,”படுக்கையிலே சிறுநீர் கழிக்கும் குழந்தை”யின் நிலையிலே நாம் இருக்கிறோம். நாம் வெளிநாட்டவரின் உணவு, உடை, நாகரிக முறைகளைப் பின்பற்றுகிறோம். ஆனால், அவர்களின் சுற்றுப்புறத் தூய்மை முறையை மட்டும் பின்பற்றாதாது ஏன்? பாதையில் எச்சில் துப்புவதாலும், சிறுநீர் கழிப்பதாலும், பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளைத் தூய்மை செய்யாததாலும் பல தொற்று நோய்களுக்கு ஆளாகிறோம்.
பாரத மக்களுக்கும், நாட்டிற்கும் தீமை விளைவிக்கும் இத்தகு பழக்கங்களை அடியோடு அகற்றுவதற்கு நாம் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும். பிறந்த நாட்டின் கௌரவத்தைக் குலைக்கும் வகையில் பிறர் கேலி பேசும்போது நம் இதயம் வேதனை அடைய வேண்டும். இன்றைய இந்த நிலையை மாற்றுவதற்கு முழு மனதுடன் முயற்சி செய்வேன் என பாரத மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என அம்மா சொல்ல விரும்புகிறேன்.
பொது இடங்களில் கழிவுப்பொருள்களையும், பயனற்ற பொருள்களையும், வீசி எறியாதீர்கள்; சிறுநீர் கழிக்காதீர்கள்; பாதையில் எச்சில் துப்பாதீர்கள்; மூக்கைச் சிந்துவதற்கு கைக்குட்டையை உபயோகிப்பது போலவும்,எச்சில் துப்புவதற்கும் ஒரு கைக்குட்டையை உபயோகிக்க வேண்டும். பின்னர் அதைத் துவைத்துச் சுத்தம் செய்து விட்டு, மீண்டும் உபயோகிக்கலாம்.
தூய்மையின்மை என்ற பெயரில் நாம் பிற நாடுகளுக்கு முன்னால் தலைகுனியும் நிலை வரக்கூடாது. வீடு,சுற்றுப்புறம்,பொது இடங்கள் ஆகியவற்றைத் தூய்மையுடன் வைத்திருப்பதை ஒரு யக்ஞமாகக் கருத வேண்டும். உண்டு, உறங்குவது போல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும் தினசரி வாழ்வின் ஒரு பாகமாக மாற வேண்டும். உடலைத் தூய்மையுடன் வைத்திருக்கத் தினமும் குளிப்பது போல, வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவது போலவும் நம் நாட்டின் உடல் உறுப்புகளான சாலைகளையும், பொது இடங்களையும் தூய்மையாகவும் அழகாகவும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை ஒரு விரதமாகக் கருதவேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் இந்த யக்ஞம் நிச்சயமாக வெற்றிபெறும்.
பாரதத்தின் எழிலையும் பண்பாட்டையும் தேடிவரும் உல்லாசப் பயணிகளை வரவேற்க, சுற்றுலாத் துறையினர் அழகான பெண்களை அலங்கரித்து நிறுத்துகின்றனர். ஆனால், உண்மையில் அழகே வடிவான நம்முடைய பாரதத்தாய் இப்போது ஒரு குஷ்டரோகியைப் போல் ஆகிவிட்டாள். அந்த பாரதத்தாய் தனது அழகையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் பெறச்செய்வது நமது கடமையாகும். பால்பாயசமாக இருந்தாலும் அழுக்கான பாத்திரத்தில் கொடுத்தால் யாரும் குடிக்கமாட்டார்கள். அழுக்கு நிறைந்த பகுதிகள் யாரையும் கவராது. வீட்டிற்கு ஒரு விருந்தினர் வரும்போது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எவ்வளவு சுத்தமாக வைத்திருப்போமோ அதுபோல் நமது நாட்டையும் தூய்மையாக வைக்கவேண்டும்.
ஒரு பீப்பாய் அல்லது தொட்டியை வைத்து, அதில் குப்பைகளைப் போட்டு, அவற்றை ஒரு சைக்கிளில் எடுத்துவந்து, உரமாக மாற்றலாம். எச்சில் துப்புவதற்குத் தோன்றும்போது, கைக்குட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் பொது இடங்களில் எச்சில் துப்புவதும் குறையும். இதுமடத்தின் திட்டம் என யாரும் நினைக்க வேண்டாம். இது அனைவரின் திட்டமாக மாறவேண்டும். இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்; பிறந்த பொன்னாட்டிற்கும், நமது சமூகத்திற்கும் தேவையாகும்; பூமிக்கும், இயற்கைக்கும் தேவையாகும்.
அதனால், நம் குழந்தைகள் மீது நமக்கு அன்பு இருந்தால், நமது உடல்நலத்தில் கவனம் இருந்தால் நாம் ஒவ்வொருவரும் விழித்தெழுந்தே ஆக வேண்டும். அதற்கு அருள்புரியுமாறு அனைவரும் பரமாத்மாவிடம் பிரார்த்திப்போம்.